Tuesday, 27 December 2011

அழகிய திருடி



காண முடியாது
கருப்பு நிலாவை..
கண்டுவிட்டேன் நான்
திருடி நீ அதைத் திருடி 
நெற்றியில் பொட்டாக வைத்ததை...

கதிரொளி மறைவினை
கண்ணாடி அணியாமலேயே
கண்டுவிட்டேன் நான்..
திருடி நீ அதைத் திருடி
கண்ணாடி வளவியாய்
கையில் அணிந்துகொண்டதை..

தேனீக்களின் உழைப்பை
உதடுகளால் வர்ணிக்க முடியாது
அவைகள் சேர்த்த தேனை
கண்டுவிட்டேன் நான்..
திருடி நீ அதைத் திருடி
உதட்டுச் சாயமாய்
பூசிக்கொண்டதை...

இன்னும் காத்துக்கொண்டிருப்பவை
எத்தனை எத்தனையோ
உன்னிடம் திருட்டுப்போக...

Sunday, 25 December 2011

காதல் கவிஞன்



எந்தன் பெயரும்
கவிதையாய் வெளியிடப்பட்டது
உந்தன் உதடுகள் உச்சரிக்கும்போது...!

எந்தன் பெயர்முன்
கவிஞன் என்று சேர்க்கப்பட்டது
நான் உன் பெயரை உச்சரிக்கும்போது...!
   

Tuesday, 11 October 2011

அச்சச்சோ..



என்ன நினைக்கிறேன்
எங்கு இருக்கிறேன்
என் பெயரும் மறந்தேனே..!
கொஞ்சம் சிரிக்கிறேன்
பஞ்சாய் பறக்கிறேன்
தஞ்சம் கனவில்தானே..!
விடைகளை
தடையின்றி தந்தேனே..
இன்று
நானே கேள்வியனேனே..!
நொடிப்பார்வையில்
கோடிப் பேர்களை
காண்பேனே..
இமைகள் இன்று
நிரந்தரமாய் மூடப்பட்டதே..!
அச்சச்சோ
என்னாச்சோ..!!.

Thursday, 22 September 2011

ஜோதிடம்..


ஒரு மாலை நேரம்
அவள் இடது கைகள்
என் வலது கைகளை
பற்றின..
என்னவென்று கேட்டேன்..
ஜோதிடம்
பார்க்கிறேன் என்றாள்...!
வலது கையின்
ஆள்காட்டி விரலால்
என் கை ரேகைகளை
வருடிக்கொண்டே
கூறினாள்..
'உன்னை
அழகான பெண்ணொருத்தி
கரம் பிடிப்பாள்' என்று..
அவளுக்கு
தெரிந்திருக்கவில்லை
என் கரத்தினை
பிடித்துக்கொண்டிருந்தது
அவள் தான் என்று..!

Friday, 9 September 2011

கவிதைகள்


உந்தன்
உதடுகளில் இருந்து
மலர்ந்த
வார்த்தைப்பூக்களை
எந்தன்
நாட்குறிப்பில்
சேகரித்து வைத்தேன்.!
இன்று
அவையனைத்தும் 
அச்சிடப்படாத கவிதைகள்...!

Saturday, 20 August 2011

அந்தாதிப் பெண்




இதழ்கள் இல்லாத
வண்டுகள் மொய்க்காத
தீர்க்கமான
கருப்பு வர்ண பூக்கள்,
உன் கற்றைக்கூந்தல்...!

கற்றைக்கூந்தல்
பூந்தோட்டம் செல்ல
ஒற்றையடிப்பாதை,
நேரெடுத்த வகிடு...!

வகிடு என்ற
ஒற்றையடிப்பாதை
வந்து சேரும் இடம்
தலைவாசல்,
ஆம்
உன் நுதல்..!

நுதல் மேலே
நீர் தெளித்து
நேர்த்தியாக
இடப்பட்ட
ஒற்றைப்புள்ளி கோலம்,
உன் நெற்றிப்பொட்டு..!

பொட்டுக்கு
கீழாக
அனுமதியின்றி
ஆக்சிஜனை
சுட்டுக்கொண்டிருக்கும்
துப்பாக்கிகள்,
உன் நாசி..!

நாசிக்கு மேலாய்
இருபுறமும்
பார்வை மொழியால்
ஓராயிரம்
வார்த்தைகள் எழுதும்
இரட்டை எழுத்தாளர்கள்,
உன் விழிகள்..!

விழிகள் என்னை
காணும்போதெல்லாம்
வெட்கி
சிவந்து மலரும்
தாமரைப் பூக்கள்,
உன் கன்னங்கள்..!

கன்னங்கள் வழியே
கூந்தல் பூக்கள்
அவ்வப்போது
வந்து முத்தமிடும்
அழகான பிறை நிலாக்கள்,
உன் இதழ்கள்..!

Sunday, 14 August 2011

அழகிய நடனம்


காகிதத்தின் மேடையில்
விரல்கள் நடனமாடியது
பேனாவின் உதவியுடன்...
கிடைத்தது
அழகிய கவிதை..!!.

Saturday, 13 August 2011

அழிவை நோக்கி..





நள்ளிரவில்
சிரித்த வண்ணமாக
பிறந்தது
இந்த சுதந்திரக் குழந்தை...!

பலகாலமாய்
விடியலைக்
காணாமல்
அழத்தொடங்கியது...

இப்போது
கொஞ்சம் கொஞ்சமாய்
அழியவும்
துணிந்துவிட்டது...

நம்முள் பாதி
அழித்துக்கொண்டிருக்கிறோம்..
இருக்கும் மீதி
வேடிக்கைதான்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்...!.

Thursday, 11 August 2011

ஏன் இப்படி?

உன்
நெற்றியில்
புள்ளியிட்டு
கண்களில்
கோலம் போடுகின்றாய்...
என்
கண்களில்
கொள்ளியிட்டு
கனவினில்
தாளம் போடுகிறாய்...

Wednesday, 10 August 2011

சாதி

பாதியில்
வந்தது
பாதியிலேயே
போகுமாம்..
சாதி..?

அழுகை எதற்கு

நீ
அழுவதற்கு
முன்னும் பின்னும்
என்றுமே அழகுதான்
வானவில்லைப்போல..
சிறு மாற்றம்,
வானவில்லுக்கும்
இல்லாத
அழகான
இரு நிறங்கள்,
உன் கண்கள் கொண்ட
கருப்பு வெள்ளை..
உந்தன்
கண்ணீரைக் கொண்டு
புதிய
வானவில்லை
அழிக்காதே...!!.

Tuesday, 9 August 2011

உழவன்





மக்களுக்கு
இரை கொடுக்கும்
இறைவன்...